
டெல்லி, ஜூலை 25- நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை இப்படியே தொடர விட முடியாது; நீட் இளநிலை தேர்வில் நிகழும் தொடர் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘நீட்’ வினாத்தாள் கசிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள்,
நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் தற்காலிக அல்லது அவசரகால நடவடிக்கைகள், பல ஆண்டுகளாக தொடர்ந்து சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த பிரச்னையில், தற்காலிக தீர்வுகளை விடுத்து,
தேர்வு முறையில் நிரந்தர மாற்றங்களை உருவாக்க வேண்டும். நீட் இளநிலை தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து நிகழும் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தை இனி இப்படியே விட முடியாது. இனி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை, உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்.
நீட் தேர்வை கணினி வழியில் நடத்துவது, தரவு பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்.
கணினி முறையில் நடத்தப்படும் போது, வினாக்கள் கசியாமல் இருப்பதை தடுக்க மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.













