
ஜெருசலேம்: செப். 13-
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக, கடந்த 2019 முதல் 2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ.4.04 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த வழக்கறிஞர் யாரா விங்க்லர் ஷலித், கடந்த 2025 டிசம்பரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து தகவல் கேட்டிருந்தார்.
இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், சம்பந்தப்பட்ட செலவுகளின் மாத வாரியான விரிவான விவரங்களை வழங்கியுள்ளது. அந்த விவரங்களில், 2019ம் ஆண்டு தொடக்கம் முதல், கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, பிரதமர்களுக்கான சிகையலங்காரம், ஒப்பனை மற்றும் தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மொத்தம் ரூ.4.49 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை, 2019ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்துக்கானது என பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ள கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த செலவுகளில் 90 சதவீதம், அதாவது ரூ.4.04 கோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோருக்காகவே செலவிடப்பட்டுள்ளது. சிகையலங்காரம், ஒப்பனை மற்றும் தோற்றம் தொடர்பான செலவுகள் குறித்து யாரா விங்க்லர் ஷலித் கேட்ட தகவல் அறியும் உரிமை மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்த மாத வாரியான செலவு விவரங்களை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.













