Home செய்திகள் தேசிய செய்திகள் பஞ்சாபில் பயிர்க்கழிவு எரிப்பு 4,657 ஆக உயர்வு

பஞ்சாபில் பயிர்க்கழிவு எரிப்பு 4,657 ஆக உயர்வு

சண்டிகர்: நவ. 11-
பஞ்சாப் மாநிலத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் புதிதாக 198 இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நடப்பு கண்காணிப்புக் காலத்தில் பதிவான பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 4,657 ஆக அதிகரித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) காற்று மாசு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பஞ்சாபில் பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களின்படி, தர்ன் தரன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 659 இடங்களிலும், ஃபெரோஸ்பூரில் 621 இடங்களிலும், சங்ரூரில் 508 இடங்களிலும் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, 1,442 வழக்குகளில் சுற்றுச்சூழல் இழப்பீடாக மொத்தம் ரூ.72.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை ரூ.33.60 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிர்க்கழிவுகளை எரித்த விவசாயிகளின் நில ஆவணங்களில் அதிகாரிகள் 1,150 சிவப்புக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளனர். அவற்றில், தர்ன் தரன் மாவட்டத்தில் 310 பதிவுகளும், ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் 192 பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
நில ஆவணங்களில் சிவப்புக் குறிப்பு பதிவு செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெறுவதிலும், நிலத்தை விற்பனை செய்வதிலும் சிக்கல் ஏற்படும். பயிர்க்கழிவு எரிப்பு தொடர்பாக விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளன.