
பெங்களூரு, நவ. 15-
நம்ம மெட்ரோ பிங்க் லைன் முதல் கட்ட வணிக ரீதியான ரெயில் சேவைக்கு முதல் நாளிலேயே பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று இரவு 8 மணி வரை இந்த வழித்தடத்தில் உள்ள 6 ரெயில் நிலையங்களில் மொத்தம் 33,409 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், ஜெயதேவா ஆஸ்பத்திரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் மட்டுமே அதிகபட்சமாக 18,714 பேர் பயணித்துள்ளனர்.
பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகம் (பி.எம்.ஆர்.சி.எல்.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஜெயதேவா ஆஸ்பத்திரி நிலையத்தின் பிங்க் லைன் நடைமேடையில் இருந்து மட்டும் 6,703 பேர் ரெயிலில் ஏறியுள்ளனர். மேலும், காளேன அக்ரஹாரா நிலையத்தில் இருந்து 4,944 பேரும், ஹுளிமாவு நிலையத்தில் இருந்து 3,028 பேரும், பிலேகஹள்ளி-ஐ.ஐ.எம்.பி. நிலையத்தில் இருந்து 2,316 பேரும், என்.எஸ். பாளையா-ஜே.பி. நகர் 4-வது கட்ட நிலையத்தில் இருந்து 1,640 பேரும், சுத்தகுண்டே பாளையா நிலையத்தில் இருந்து 2,767 பேரும் பயணம் செய்துள்ளனர்.
காளேன அக்ரஹாரா முதல் எஸ்.ஜி. பாளையா வரையிலான 7.5 கிலோ மீட்டர் தூர உயர்மட்ட வழித்தடத்தில் இந்த முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நேரம் மாற்றம்
பி.எம்.ஆர்.சி.எல். அறிவித்துள்ள கால அட்டவணையின்படி, ஒவ்வொரு திங்கட்கிழமையும் காளேன அக்ரஹாராவில் இருந்து அதிகாலை 4.55 மணிக்கு முதல் ரெயிலும், எஸ்.ஜி. பாளையாவில் இருந்து அதிகாலை 5 மணிக்கு முதல் ரெயிலும் புறப்படும். செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரு ரெயில் நிலையங்களில் இருந்தும் காலை 6 மணிக்கு முதல் ரெயில் புறப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் ரெயில் சேவை தொடங்கும்.
தினமும் இரவு கடைசி ரெயில் காளேன அக்ரஹாராவில் இருந்து இரவு 10.50 மணிக்கும், எஸ்.ஜி. பாளையாவில் இருந்து இரவு 10.54 மணிக்கும் புறப்படும்.
8 நிமிடங்களுக்கு ஒரு ரெயில்
பயணிகளின் வசதிக்காக ரெயில்கள் இயக்கப்படும் கால இடைவெளியையும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் (பீக் ஹவர்ஸ்) ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கும் ஒரு ரெயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு ரெயில் இயக்கப்படும்.
பயணிகளின் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து அளவை கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் ரெயில்கள் இயக்கப்படும் கால இடைவெளியில் மாற்றம் செய்யப்படும் என பி.எம்.ஆர்.சி.எல். தெரிவித்துள்ளது.
21.26 கி.மீ. பிங்க் லைன்
காளேன அக்ரஹாரா முதல் நாகவாரா வரை மொத்தம் 21.26 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிங்க் லைன் மெட்ரோ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 7.5 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட வழித்தடமாகவும், மீதமுள்ள 13.76 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை வழித்தடமாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த முழு திட்டமும் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, தெற்கு பெங்களூருவில் இருந்து வடக்கு பெங்களூரு வரையிலான மெட்ரோ போக்குவரத்து மேலும் எளிதாகும் என்றும், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க இது பெரிதும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.













