
சென்னை: நவ. 15-
சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் நாளை (நவ. 16) டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை அனுபவங்கள், ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற சுயசரிதை நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் ஏற்கெனவே நவ. 10-ம் தேதி இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துவிட்டது.
இதன் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் நாளை நடைபெறவுள்ளது. விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், முதல்வர் விஜய்யும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாகவும், இதற்காக அவர் நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று முதல்வர் விஜய் விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, அதே நாளில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியையும் முதல்வர் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின்போது, மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என்றும், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.













