
புதுடெல்லி: நவ. 15-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சார்பில் புதுடெல்லியில் நடைபெற உள்ள நாகரிகங்களுக்கிடையேயான கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்த மாநாடு நவம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு எஸ்சிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தானும் மாநாட்டில் பங்கேற்கிறது.
பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் டாக்டர் முசாதிக் மசூத் மாலிக் பங்கேற்பார் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவிப்பதிலும், எஸ்சிஓ அமைப்பின் வாயிலாக உறுப்பு நாடுகளுக்கு இடையேயான மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதிலும் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் கோவாவில் நடைபெற்ற எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்றிருந்தார். அதன்பிறகு, பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.
உறுப்பு நாடுகளுக்கு இடையே கலாசாரம், கலை, இலக்கியம், பாரம்பரியம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர புரிதலையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டை நவம்பர் 20-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.













