
திருச்செந்தூர்: நவ. 15-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாகக் குவிந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா, கடந்த 10-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரிப்பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகின்றன. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாளுக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, கிரிப்பிரகார உலாவுக்குப் பிறகு சாயாபிஷேகம் நடக்கிறது.
பக்தர்கள் பாதுகாப்புக்காக கடற்கரையில் தடுப்பு கம்புகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தலைமையில் சுமார் 4,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் பக்தர்கள் ஆழமான பகுதிக்குச் செல்லாதவாறு மிதவை தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.













