Home மாவட்டங்கள் சென்னை பிடிஆருக்கு என் மீது தனிப்பட்ட ஈகோ: நிர்மல் குமார்

பிடிஆருக்கு என் மீது தனிப்பட்ட ஈகோ: நிர்மல் குமார்

சென்னை, செப். 24-
முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தன் மீது தனிப்பட்ட ஈகோவும் வயிற்றெரிச்சலும் இருப்பதாகவும், அதனால் தன்னைப் பற்றி இல்லாதவற்றை அவர் கூறி வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரை ராஜினாமா செய்யுமாறு தாம் அழுத்தம் கொடுத்ததாக பிடிஆர் கூறியிருப்பது குறித்து விளக்கம் அளித்தார். கடந்த 3 மாதங்களாக பலர், அறங்காவலர் குழுத் தலைவர் பதவி விலக வேண்டும் என்றும், அரசே அவரை நீக்க வேண்டும் என்றும் தன்னை கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். ஆனால், கோயில் விவகாரங்களில் தாங்கள் தலையிட மாட்டோம் என்றும், அவர் தானாக ராஜினாமா செய்தால் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் தெளிவுபடுத்தியதாக தெரிவித்தார். மதுரை மாவட்டப் பொறுப்பு அமைச்சராக, கும்பாபிஷேகத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், மாநகராட்சி, காவல் துறை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நிர்வாக ஏற்பாடுகளில் மட்டுமே தலையிட்டதாகவும், கோயிலின் உள்விவகாரங்களில் தலையிடவில்லை என்றும் நிர்மல் குமார் கூறினார். கும்பாபிஷேகத்தின்போது பிடிஆரின் தாயார் ருக்மணியம்மாளை தாமே அழைத்துச் சென்று அமர வைத்து, அவரை நன்றாக கவனித்ததாகவும் அவர் தெரிவித்தார். கும்பாபிஷேகத்துக்கு 3 நாட்களுக்கு முன்பே, ருக்மணியம்மாளுக்குத் தேவையானவற்றைச் செய்து, அவரது ஆலோசனையையும் பெறுமாறு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். பிடிஆர் அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபத்தை, அவரது அரசியல் செல்வாக்கால் 3 ஆண்டுகளாக முடக்கி வைத்திருப்பதாக அறக்கட்டளை உறுப்பினர்கள் தன்னிடம் தெரிவித்ததாக நிர்மல் குமார் கூறினார். குடும்ப விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்றும், மண்டபத்தைச் சட்டரீதியாகத் திறக்க தேவையான உதவிகளைச் செய்வோம் என்றும் அவர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். மேலும், பிடிஆர் திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் நிதியமைச்சர் பதவி ஏன் பறிக்கப்பட்டது என கேள்வி எழுப்பிய அவர், ரூ.30 ஆயிரம் கோடி தொடர்பானதாக வெளியான ஆடியோ குறித்து பிடிஆர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது அதை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பத் தயாரா என தெரிவிக்க வேண்டும் என்றார்.