
சென்னை, செப். 12- பட்டினம்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு, அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த தலைமை செயலக வளாகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்போது புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
புதிய வளாகம் கட்டுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றன. அவர்களை எங்கு அப்புறப்படுத்துவது, அவர்களின் நிலை என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மக்களின் மனநிலையை அறிய ‘ஒன் இந்தியா’ நேரடியாக அப்பகுதிக்குச் சென்றது. அப்போது, மீனவர்கள் அனைவரும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். “வலைக்குச் சென்று பிடிக்கும் மீன்களை விற்று குடும்பத்தை நடத்துவதுதான் எங்கள் வாழ்வாதாரம். புதிய தலைமை செயலகம் வந்தால், கவுச்சு நாற்றம் அடிக்கிறது, அனைவரையும் காலி செய்யுங்கள் என்று கூறுவார்கள். பார்வைக்கு நன்றாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டும் என்று சொல்லி, மீன் கடை வைக்கக்கூடாது என்பார்கள். அப்போது நாங்கள் எங்கு செல்வது? அதிகாரிகள் வருகிறார்கள், இவர்கள் வருகிறார்கள் என்று கூறி மீன் கடைகளை அகற்றினால், எங்கள் நிலை என்ன?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
“ஒடுக்கப்பட்ட, உழைக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரமான கடல் சார்ந்த தொழிலும், சிறு, குறு கடைகளும் அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படும். மக்கள் வாக்களித்துத்தான் ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள்.
















