
பெங்களூர், அக். 27-
பெங்களூரு கங்கம்மனகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்மகொண்டனஹள்ளியில் நேரிட்ட தீ விபத்தில், புகையால் மூச்சுத்திணறி கணவன்–மனைவி உயிரிழந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கட்டிடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வந்த ஆட்டோமொபைல் கடையில் தீப்பற்றியதில், முதல் தளத்தில் இருந்த தம்பதியால் வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூச்சுத்திணறி சாவு
உயிரிழந்தவர்கள் கல்புரகி மாவட்டம் ஆலந்த் தாலுகாவைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 30) மற்றும் அவரது மனைவி பெலகாவி மாவட்டம் முரகோட்டைச் சேர்ந்த நாகரத்னா என தெரியவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்கள், கம்மகொண்டனஹள்ளியில் வசித்து வந்தபடியே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்ககில் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 24-ந் தேதி இரவு 8.30 மணியளவில் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள ஆட்டோமொபைல் கடையில் திடீரென தீப்பற்றியது. அப்போது முதல் தளத்தில் இருந்த தம்பதியால் வீட்டை விட்டு வெளியேற இயலவில்லை. இதனால் கடை முழுவதும் பரவிய அடர்ந்த புகையால் மூச்சுத்திணறி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
நேற்று வீட்டின் கதவு மூடப்பட்ட நிலையில் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து ஆய்வு செய்தபோது தம்பதியின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உரிமையாளர்கள் மீது வழக்கு
இச்சம்பவம் தொடர்பாக அலட்சியமாக செயல்பட்டதாக கூறி, கடையின் உரிமையாளர் சபீக் பாஷா மற்றும் கட்டிட உரிமையாளர் ஹிநாயத் உல்லா ஆகிய இருவர் மீதும் போலீசார் எப்.ஐ.ஆர் (வழக்கு) பதிவு செய்துள்ளனர்.
அந்த கடையில் ஆட்டோமொபைல் பொருட்கள், பல்வேறு வகையான ஆயில் வகைகள் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
போலீசார் தீவிர விசாரணை
முதற்கட்ட விசாரணையில், சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. மின் கசிவு (ஷார்ட் சர்க்யூட்) காரணமாக தீப் பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீயணைப்புத் துறை மற்றும் பெஸ்காம் (மின்சார வாரியம்) அதிகாரிகளின் அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) நாகேஷ் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த கடையில் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் ரீஃபிளிங் செய்யும் பணி நடந்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேஸ் கசிவு ஏற்பட்டதாலேயே தீப்பிடித்து கடையில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. மேலும், அங்கு சட்டவிரோதமாக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் சேமித்து வைத்து விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இந்த தீ விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.













