
பெங்களூரு, நவ. 28-
பெங்களூரில் யலங்கா மற்றும் ஹுணசமாரனஹள்ளி பகுதிகளில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிகளைக் குறிவைத்து, உள்ளே புகுந்து செல்போன்களைத் திருடி வந்ததாகவும், இளம்பெண்களிடம் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாகவும் புகார்கள் எழுந்தன. சமீபத்தில் ஹுணசமாரனஹள்ளி அருகே உள்ள விடுதிக்குள் புகுந்த நபர் ஒருவர், இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிக்குஜாலா போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். தேவனஹள்ளி அருகே உள்ள ஐ.வி.சி. சாலை லேஅவுட் பகுதியில் பதுங்கியிருந்த ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியைச் சேர்ந்த நரேஷ் என்பவரைப் பிடிக்க போலீசார் சென்றனர்.அப்போது, போலீசாரைக் கண்டதும் நரேஷ் கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனே தற்காப்புக்காகச் சிக்குஜாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில், நரேஷின் காலில் குண்டு பாய்ந்தது.
காயமடைந்த நரேஷை போலீசார் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவத்தில் போலீஸ்காரர்கள் லக்ஷ்மண், சச்சின் ஆகியோரைத் தாக்க முயன்றது மற்றும் விடுதிகளில் நடந்த குற்றச் செயல்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













