
புதுடெல்லி: நவ. 28-
அனைத்து மாநிலங்களிலும் சரிசமமாக 50 சதவீதம் அளவுக்கு மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாஜக அரசின் இந்த முடிவால் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு பெருகிவருகிறது.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்)
மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த ஏப்ரலில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மசோதாக்கள் மூலம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு இருந்தது. அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாக்கள் என்பதால் இவற்றை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.
இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம் மற்றும் மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக 50 சதவீதம் அளவுக்கு மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவால் பாஜக அரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.













