
புதுடெல்லி: நவ. 28-
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 292 எம்.பி.க்கள் இருந்தனர். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்த 20 மக்களவை எம்.பி.க்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்து பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தனர். இதனால் மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 318 ஆக உயர்ந்தது. அசாம் மாநிலம் நகோன் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கூட்டணியின் பலம் 319 ஆக அதிகரித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்கு ஆளும் பாஜக கூட்டணிக்கு 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு மேலும் 41 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. திமுகவைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் அணி மாறி வாக்களிக்கக்கூடும் என்றும், சமாஜ்வாதி கட்சி (37) உள்ளிட்ட சில கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.மாநிலங்களவையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனர். இதேபோல், கடந்த ஜூலை மாதம் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்களும் பாஜகவில் இணைந்தனர். இதனால் மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 151 ஆக உயர்ந்துள்ளது. 243 எம்.பி.க்களைக் கொண்ட மாநிலங்களவையில், இந்த மசோதாக்களை நிறைவேற்ற 162 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. திமுகவைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு அளிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.













