
துபாய், ஏப்ரல் 23- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. இந்தத் தொடரில் சல்மான் அலி ஆகா தலைமையில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறி இருந்தது. அந்த அணி தனது அனைத்து ஆட்டங்களையும் இலங்கையில் விளையாடி இருந்தது. இந்தத் தொடரின் போது பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான முகமது நவாஸிடம் ஊக்க மருந்து சோதனை செய்யப்பட்டு இருந்தது. இந்த முடிவு தற்போது வெளியாகி உள்ளது. இதில் முகமது நவாஸ் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணையை தொடங்கி உள்ளது.
32 வயதான முகமது நவாஸ் டி 20 உலகக் கோப்பை தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 15 ரன்கள் சேர்த்து இருந்தார். பந்துவீச்சில் 7 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். முகமது நவாஸ் போதைப்பொருள் சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் சர்ரே கவுண்டி அணியுடன் அவர் மேற்கொண்டிருந்த டி 20 பிளாஸ்ட் தொடருக்கான ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.





















