
ஜெனீவா, நவ. 11-
ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில், ஐநா உறுப்பு நாடுகளான 193 நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து ‘உலகளாவிய காலமுறை ஆய்வு’ என்ற செயல்முறையின் கீழ் ஆய்வு நடத்தி வருகிறது. பொதுவாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, தனக்கான ஆய்வு வாய்ப்பை ஓராண்டுக்கு முன்பே தவிர்த்துவிட்டது. அமெரிக்க அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ளக்கூடும் என்ற நம்பிக்கையில், 2025-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற இருந்த அந்த ஆய்வு நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அனுப்பிய மின்னஞ்சலில், “ஐநா மனித உரிமைகள் கவுன்சில் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களை இந்த அமைப்பு கண்டிக்கத் தொடர்ந்து தவறி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நாட்டின் பங்கேற்பு அவசியம் என்பதால், அமெரிக்காவுக்கான ஆய்வை தொடர்ந்து நடத்த முடியாது என்று ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.















