
பெங்களூர்: அக். 22-
மைசூரு தசரா விழாவைக் கண்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம், கெங்கேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மைலசந்திராவில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
கொரகுண்டேபாளியத்தைச் சேர்ந்த ரஞ்சித் (20) மற்றும் நாகேந்திரா (19) ஆகியோர் உயிரிழந்தவர்கள் ஆவர். இருவரும் மைசூரு தசரா விழாவைக் கண்டுவிட்டு தங்களது பஜாஜ் 400 சிசி பைக்கில் பெங்களூருக்குப் புறப்பட்டிருந்தனர்.
கொரகுண்டேபாளியத்தில் உள்ள வீட்டிற்கு அதிவேகமாகச் செல்லும் வழியில், அதிகாலை 2.30 மணியளவில் மைலசந்திரா சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது பைக் மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் கீழே விழுந்து படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த ரஞ்சித் படிப்பு முடித்து வேலை தேடி வந்தார்; நாகேந்திரா மளிகைக் கடை நடத்தி வந்தார். இருவரும் நண்பர்கள் ஆவர்.
தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த கெங்கேரி போக்குவரத்துப் காவல்துறையினர் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.













