
சென்னை, அக். 28-
சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணியை, மேலும் 2 போக்சோ வழக்குகளில் சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ். பத்மா, ஜெம் வீரமணியை வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெம் வீரமணிக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரும் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெம் வீரமணி மீது சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸார் இதுவரை மொத்தம் 8 போக்சோ வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் 4 வழக்குகளில் அவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதால், இதுவரை 6 வழக்குகளில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.














