Home செய்திகள் தேசிய செய்திகள் மோடிக்கு புதின், மெலோனி பிறந்தநாள் வாழ்த்து

மோடிக்கு புதின், மெலோனி பிறந்தநாள் வாழ்த்து

புதுடில்லி, செப். 18- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம், அதிபர் புதினின் வாழ்த்துச் செய்தியையும் இரு தலைவர்களும் இணைந்திருக்கும் புகைப்படத்தையும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்டது. அந்த வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடி தனது நாட்டு மக்களிடையே ஆழ்ந்த மரியாதையையும், உலக அரங்கில் பெரும் செல்வாக்கையும் பெற்றிருப்பதாக புதின் குறிப்பிட்டுள்ளார். இந்தியா–ரஷ்யா இடையிலான சிறப்பு மற்றும் ராஜாங்கக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த வாரம் டெல்லி பயணத்தின்போது தனக்கும் தனது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு புதின் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வெளிப்படையாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் அரசியல் விவேகம் மற்றும் தொலைநோக்குப் பார்வையையும் புதின் பாராட்டியுள்ளார்.