
புதுடெல்லி, செப். 6: இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை சிலர் சகிக்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சி எட்டியிருப்பது, நாட்டின் தன்னம்பிக்கையை உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்டார். மேற்கு ஆசியாவில் போர் மற்றும் உலகளாவிய வர்த்தக பாதிப்புகளுக்கு இடையிலும் இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒருகாலத்தில் இந்தியாவை பலவீனமான நாடுகளின் பட்டியலுக்கு தள்ளியவர்களுக்கு, இந்த வளர்ச்சி புள்ளிவிவரங்களை செரித்துக்கொள்ள முடியவில்லை என்றார். 2013-ஆம் ஆண்டில் இதே கல்லூரியில் பேசியபோது, அரைகுறை மனநிலை கொண்டவர்களை குறித்திருந்தேன். இன்றும் சிலர் நாட்டின் வளர்ச்சியை எதிர்மறையாகவே காண்கிறார்கள். ஆனால் உண்மை உரக்கப் பேசும்போது, பொய்களின் சலசலப்பு தானாக அடங்கும். இந்தியா, இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி பொருளாதார சக்தியாக உள்ளது. ‘பிரதமரின் ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் மூலம் 60 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, ஏழை மக்கள் நிதி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 2014-ல் மொபைல் போன்களை இறக்குமதி செய்த இந்தியா, இன்று 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மொபைல் போன்களை ஏற்றுமதி செய்கிறது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தையும் தேவையின்றி எதிர்ப்பவர்கள், அதிருப்தியில் இருக்கும் உறவினர் போன்றவர்கள். யுபிஐ, அதிவேக ரயில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் என எந்த நன்மையையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.













