Home செய்திகள் தேசிய செய்திகள் மோடியுடன் நேருக்கு நேர் பேசியதில்லை: சோனியா

மோடியுடன் நேருக்கு நேர் பேசியதில்லை: சோனியா

புதுடெல்லி, நவ. 11-
பிரதமர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் பேசியதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில் தெரிவித்துள்ளார். சோனியா காந்தி எழுதியுள்ள “பிளாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்” என்ற நூல் 7 அத்தியாயங்களையும், 544 பக்கங்களையும் கொண்டது. இதில் தனது வாழ்நாளின் முக்கிய நிகழ்வுகளை அவர் பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின்போது சபாநாயகர் அறையில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பது வழக்கம். அந்த அறையில் பிரதமர் மோடியை சந்தித்தாலும், இருவரும் பரஸ்பரம் வணக்கம் மட்டுமே தெரிவிப்போம். கடந்த காலங்களில் தலைவர்கள் நட்புடன் உரையாடிய நிலையில், பிரதமர் மோடி வேறு பக்கம் திரும்பிக்கொள்வார் என்றும், கண்களைப் பார்த்து பேசமாட்டார் என்றும் சோனியா குறிப்பிட்டுள்ளார். சில நேரங்களில் தனது உடல்நலம் குறித்து மோடி விசாரித்ததாகவும், அப்போதும் சில வார்த்தைகளில் மட்டுமே உரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். தங்களது அரசியல் கொள்கைகள் வேறுபட்டவை என்றும், தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என்றும் சோனியா தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியையும், பல்வேறு இனங்கள், மொழிகள், கலாசாரங்கள் மற்றும் மதத்தினரை அரவணைக்கும் கொள்கையையும் தான் பின்பற்றுவதாகவும், மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 59 கரசேவகர்கள் உயிரிழந்ததும், அதன் பின்னர் குஜராத்தில் ஏற்பட்ட கலவரமும் மிகவும் துயரமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார். 2004 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே பிரதமர் பதவியை ஏற்கக் கூடாது என முடிவு செய்ததாகவும், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியும் அந்தப் பதவியை திட்டவட்டமாக மறுத்ததாகவும் சோனியா தெரிவித்துள்ளார்.புளூஸ்டார் நடவடிக்கைக்குப் பிறகு இந்திரா காந்திக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், “நான் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்; நீ தைரியமாக இருக்க வேண்டும்” என்று அவர் ராகுலிடம் கூறியதாகவும் சோனியா பதிவு செய்துள்ளார். 1969 ஜனவரி 18-ல் பிறந்த தனது முதல் குழந்தை மறுநாள் உயிரிழந்ததாகவும், பின்னர் அது பெரோஸ் காந்தியின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.