
நர்வார் கோட்டை, ஜூலை 24- மத்தியப் பிரதேசத்தின் நர்வார் கோட்டையில் இருந்த 400 ஆண்டு பழமையான பீரங்கி, சர்வதேச கடத்தல் கும்பலால் துணிகரமாக கொள்ளையடிக்கப்பட்டது. பீரங்கியை கொள்ளை கும்பல் மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தால் ராஜஸ்தானில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள நர்வார் கோட்டை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாகும். கச்வாஹா ராஜ்புத் மன்னர்களால் 10ம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோட்டையில், 14 வரலாற்று சிறப்புமிக்க பீரங்கிகள் இருந்தன. இந்த பீரங்கிகள், சிந்தியா மன்னர்களின் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டவை. ஒவ்வொரு பீரங்கியும் 3. 5 டன் எடை கொண்டவை. பழங்கால பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய சட்டவிரோத சந்தையில் இத்தகைய பீரங்கிகளுக்கு நல்ல மதிப்பு உண்டு. அவற்றின் முக்கியத்துவம் கருதி கோட்டையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தக் காவலர்களையும் தாண்டி, சில நாட்களுக்கு முன் கொள்ளை கும்பலால் ஒரு பீரங்கி திருடி செல்லப்பட்டது. கோட்டையின் பின்புறம் வழியாக வந்த கொள்ளை கும்பல், துப்பாக்கியை காட்டி பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை மிரட்டி பீரங்கியை லாரியில் ஏற்றி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கோட்டையை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு அடிப்படையில் பீரங்கியை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட அந்த வாகனம் ராஜஸ்தானுக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பழமையான பொருட்களை கடத்தும் கும்பலுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்றும், கொள்ளை கும்பல் பீரங்கியை மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.பீரங்கியை கண்டறிவதற்காக ராஜஸ்தானின் கரௌலி மாவட்ட போலீஸ் அதிகாரிகள், 50க்கும் மேற்பட்ட போலீசார் ஒரு மாபெரும் தேடுதல் வேட்டையைத் துவங்கி உள்ளனர். சந்தேகிக்கப்படும் இடங்களில் தொடர்ச்சியாகத் தேடுதல் வேட்டை நடக்கிறது. பரத்பூரிலிருந்து ஒரு உலோகக் கண்டறிதல் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து, மின்னணு கருவிகளைக் கொண்டு நிலத்தை ஆய்வு செய்து வருகிறது. தேடுதல் குழுக்கள் ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி பல இடங்களில் மண்ணைத் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.













