
புதுடில்லி, செப். 18- யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) எனப்படும் கட்டணம், நுகர்வோர் மீது எந்த வகையிலும் சுமத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், யு.பி.ஐ., எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையில் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2,000 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் நிறுவனங்கள் 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். பரிவர்த்தனைத் தொகை 75 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் இருந்தாலும், வசூலிக்கப்படும் கட்டணம் 300 ரூபாய் என்ற உச்ச வரம்புக்குள் மட்டுமே இருக்கும். ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் ஆகிய அத்தியாவசியத் துறைகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு ஒரே கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படும். அதேபோல், பங்குச்சந்தை வணிகத்துக்கான யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு 0.02 சதவீதம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு யு.பி.ஐ. சேவை தொடர்ந்து முற்றிலும் இலவசமாகவே இருக்கும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வணிகர்களுக்கு விதிக்கப்படும் எம்டிஆர் கட்டணத்தை அவர்கள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதைத் தடுப்பது குறித்து, கட்டணச் சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். வணிகர்கள் தங்களிடம் வசூலிக்கப்படும் வணிகர் தள்ளுபடி கட்டணச் சுமையை நுகர்வோர் மீது திருப்புவது சட்டவிரோதமானது என்றும், அவ்வாறு செய்வது குற்றவியல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.













