Home செய்திகள் உலக செய்திகள் ரஷ்யாவில் பிளேக் அபாயம் இல்லை: அரசு மறுப்பு

ரஷ்யாவில் பிளேக் அபாயம் இல்லை: அரசு மறுப்பு

மாஸ்கோ, அக். 8- ரஷ்யாவில் பிளேக் நோய் பரவி வருவதாக சர்வதேச அளவில் அச்சம் எழுந்துள்ள நிலையில், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், நாட்டில் எந்த நோய்த்தொற்று அபாயமும் இல்லை என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், உயிரிழந்த பெண் ஆய்வக ஊழியர் மற்றும் மற்றொரு ஊழியரின் உடல்நிலை குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சைபீரியாவின் இர்குட்ஸ்க் நகரில் செயல்படும் பிளேக் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய 28 வயது பெண் ஆய்வக ஊழியர் ஒருவர், கடுமையான நிமோனியா காய்ச்சலால் கடந்த வாரம் உயிரிழந்தார். ஆபத்தான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கையாளும் ஆய்வகத்தில் அவர் பணியாற்றியதால், பிளேக் நோயால் அவர் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அதே ஆய்வகத்தில் பணியாற்றிய மற்றொரு ஊழியரும் தீவிர நிமோனியா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் ரஷ்யாவில் மீண்டும் கொடிய பிளேக் நோய் பரவுகிறதா என்ற அச்சம் உலகளவில் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை; அவை வெறும் வதந்திகள் என்றார். அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.