Home செய்திகள் தேசிய செய்திகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை உடனே நிறுத்த முடியாது

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை உடனே நிறுத்த முடியாது

புதுடெல்லி: செப். 24-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியாவால் உடனடியாக நிறுத்த முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுக்கும் நோக்கில், ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் தொடர்பான ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் சட்டத்தை’ அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா உடனடியாக நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்தினால், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும்.
ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கலாம் என்று இந்தியா முடிவு செய்யலாம். ஆனால், ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் இருந்து வெளியேறிய உடனேயே, ஏற்கெனவே குறைவாக உள்ள எண்ணெய் விநியோகத்துக்கான விலை மேலும் உயரும். இது சந்தேகத்துக்கு இடமின்றி கடுமையான சவாலாக இருக்கும். எனவே, நமது நாட்டின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கருதுகிறேன். நாட்டின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.