Home மாவட்டங்கள் சென்னை ரூ.24 லட்சம் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

ரூ.24 லட்சம் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

சென்னை, அக். 17-
மேற்கு தாம்பரம், கன்னடபாளையத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருபவர் அந்தோணி அகஸ்டின் (33). இவர் கடந்த செப். 24-ம் தேதி இரவு, பாரிமுனைக்குச் சென்று நிறுவனத்தின் வசூல் பணமான ரூ.24 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் நிறுவனத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது அடையாறு, சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள அம்பிகா அப்பளம் சிக்னலைக் கடந்தபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், அந்தோணி அகஸ்டினின் வாகனத்தை வழிமறித்தனர்.
அவரைத் தாக்கி கீழே தள்ளிய அவர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.24 லட்சம் பணப் பையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அந்தோணி அகஸ்டின் அளித்த புகாரின் பேரில், அடையாறு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, கொள்ளை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கொள்ளை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னை, தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகரைச் சேர்ந்த பாபு (28) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.