Home செய்திகள் உலக செய்திகள் இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க ஜனநாயக கட்சி எதிர்ப்பு

இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க ஜனநாயக கட்சி எதிர்ப்பு

வாஷிங்டன், நவ. 26-
இந்தியா உள்பட 14 நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது புதிய சுற்று வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முன்வந்திருப்பதற்கு ஜனநாயக கட்சி எம்.பி.யும், நாடாளுமன்ற ஆசிய பசிபிக் அமெரிக்கன் குழுவின் (சி.ஏ.பி.ஏ.சி.) தலைவருமான கிரேஸ் மெங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) ஜனநாயக கட்சி அதிகாரத்தை பிடித்தால், டிரம்ப் நிர்வாகத்தின் அதிகப்படியான வரி விதிப்பு கொள்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் புதிய திட்டம் ஆசியாவின் பல நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்பட பல பொருளாதார நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. இந்த நடவடிக்கையால் அமெரிக்க நுகர்வோர், சிறு தொழில்கள் மற்றும் இறக்குமதி பொருட்களை நம்பியுள்ள வியாபாரிகளுக்கு மேலும் சுமை ஏற்படும் என்று மெங் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (யு.எஸ்.டி.ஆர்.) பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்திற்கு வந்தால் வரி விகிதத்தை 17 சதவீதமாக குறைக்கும் வாய்ப்பையும் முன்வைத்துள்ளது. சில பொருட்களுக்கு விலக்கு அளிக்கும் திட்டமும் உள்ளது.
இந்தியாவின் உற்பத்தி கொள்கைகள், தொழிலாளர் பாதுகாப்பில் உள்ள குறைபாடு, சந்தை அணுகல் கட்டுப்பாடுகள், நிதி கொள்கைகள் மற்றும் உலகளாவிய உற்பத்தி திறனில் உள்ள சமநிலையின்மை ஆகியவற்றை அமெரிக்கா தனது நடவடிக்கைக்கு காரணமாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் தொழில்துறை கொள்கைகள் அமெரிக்க உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது வாஷிங்டனின் வாதமாக உள்ளது.
ஆனால், இந்தியாவின் உற்பத்தி திட்டங்கள் நாட்டின் தற்சார்பு மற்றும் குறிப்பிட்ட வெளிநாட்டு இறக்குமதிகள் மீதான சார்புநிலையை குறைக்கும் நோக்கம் கொண்டவை. நாட்டில் தேவையில்லாமல் அதிகப்படியான உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது என்ற குற்றச்சாட்டு சரியல்ல என்று இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புதிய வரி விதிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தியாவின் ஆடை மற்றும் ஜவுளி, நகைகள், கடல் உணவு, சூரிய சக்தி உற்பத்தி பொருட்கள் மற்றும் சில பொறியியல் பொருட்களின் ஏற்றுமதிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. அமெரிக்க சந்தையை நம்பியுள்ள இந்திய ஏற்றுமதியாளர்கள் போட்டித்தன்மை வாய்ந்த விலையை தக்கவைத்துக் கொள்ள சிரமப்பட நேரிடும். மருந்துகளின் சில பிரிவுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற முக்கிய ஏற்றுமதி பொருட்களுக்கு இந்த திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எஃகு, அலுமினியம், தாமிரம், வாகனங்கள் மற்றும் சில வாகன உதிரிபாகங்கள் ஏற்கனவே தனி வரி விதிப்பு முறையின் கீழ் உள்ளதால் அவற்றுக்கும் வேறு விதிமுறைகள் பொருந்தும்.
டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால் அமெரிக்காவில் உள்ள ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாயியர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகளுக்கு சொந்தமான 30 லட்சத்திற்கும் (மூன்று மில்லியன்) மேற்பட்ட தொழில்கள் சிக்கலில் தவிக்கின்றன என்று மெங் கூறியுள்ளார். இந்த தொழில்களில் பல, ஆசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், கலாசார மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்களை நம்பியுள்ளன. அவற்றை அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்வது எளிதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் உள்பட அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலை உயர்வால் அமெரிக்க குடும்பங்களின் செலவு அதிகரித்துள்ளது. 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் சராசரி குடும்பம் ஒன்று பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக 4,700 டாலருக்கும் மேல் கூடுதல் செலவை சுமக்க வேண்டியுள்ளது என்ற புள்ளிவிவரத்தை மெங் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் மொத்த வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களில் ஆசிய அமெரிக்கர், பூர்வீக ஹவாயியர் மற்றும் பசிபிக் தீவுவாசிகளுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு 11 சதவீதமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் 50 லட்சத்திற்கும் (ஐந்து மில்லியன்) மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதுடன், ஆண்டுக்கு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக வர்த்தகம் செய்து வருகின்றன. எனவே வரிச் சுமை இந்த நிறுவனங்கள் மீது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் சந்தை மீதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது மெங்கின் கவலையாக உள்ளது.
வரி விதிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றத்திற்கு (காங்கிரஸ்) உரியது என்றும், அதிபரின் கையில் பரவலான அதிகாரம் குவிந்திருக்கக் கூடாது என்றும் மெங் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய பிறகு நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டி, அதிகப்படியான வரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சி.ஏ.பி.ஏ.சி. உறுப்பினர்கள் முயற்சிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு திட்டம் 1974-ம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ன் கீழ் நடைபெற்று வரும் விசாரணைக்கு உட்பட்டதாகும். பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக கருத்து தெரிவிக்க 2027-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25-ந் தேதி முதல் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கவுள்ளதுடன், அதன் பின்னர் கிடைக்கும் கருத்துகளை பரிசீலித்து இறுதி நடவடிக்கை குறித்து அமெரிக்கா முடிவெடுக்கும். எனவே வரிகள் உடனடியாக அமலுக்கு வரவில்லை; தற்போது அவை பரிந்துரை நிலையிலேயே உள்ளன.