
தாணே: மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (எஃப்.டி.ஏ.) தாணே, புணே மாவட்டங்களில் நடத்திய சோதனைகளில் ரூ.48 லட்சத்துக்கும் அதிகமான காலாவதியான, சேதமடைந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், ரிலையன்ஸ் ரீடெயில், பிளிங்கிட், ஸோமாட்டோ ஹைப்பர்பியூர் நிறுவனங்களுடன் தொடர்புடைய 10 பேருக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அக்.14, 15 ஆகிய தேதிகளில் பல இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன. அழிக்கப்பட வேண்டிய உணவுப் பொருட்கள், அகற்றும் நிறுவனங்கள், உரிமம் இல்லாத வகைப்படுத்தும் கிடங்குகள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் திருப்பி விடப்பட்டு, நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக எஃப்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
தாணே சாந்தி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006, பாரதிய நியாய சன்ஹிதா, 2023 ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் வி.சுப்பிரமணியம், அந்நிறுவனத்தைச் சேர்ந்த அசோக் குமார் சிங், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் நியமனப் பிரதிநிதி விஜய் பிகாஜி கர்மாலே, கிடங்கு மேலாளர் நிலேஷ் ராம்தஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
பிளிங்கிட் காமர்ஸின் இயக்குநர் அர்பிந்தர் சிங் திந்த்சா, தீபக் சிங், ஸோமாட்டோ ஹைப்பர்பியூரைச் சேர்ந்த அபித் ஷேக், பி.கே. டிஸ்போஸைச் சேர்ந்த பாபர் மியா அகமது சித்திகி, சப்ளையர் குல்சார் அப்துல் கான், பிவாண்டியைச் சேர்ந்த சவீந்திரா மற்றும் அங்குள்ள டிஸ்கவுண்ட் ஸ்டோர் உரிமையாளர் அப்துல் மொபின் கான் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிவாண்டி அகற்றும் கிடங்கில் ரூ.24 லட்சத்துக்கும் அதிகமானவை, வட்பே ரிலையன்ஸ் கிடங்கில் ரூ.4.92 லட்சம், உசாத்தானே ஸோமாட்டோ ஹைப்பர்பியூர் மையத்தில் ரூ.7.81 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்த மதிப்பு ரூ.48,09,924 ஆகும். பொருட்கள் அழிக்கப்பட்டதாக ஆவணங்கள் வழங்கப்பட்டபோதும், அளவு மற்றும் அனுப்புநர், பெறுநர் விவரங்களில் முரண்பாடுகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குல்சார் நகர் கடையில் உரிமம், கொள்முதல் ரசீதுகள் இன்றி விற்பனை நடந்ததும் கண்டறியப்பட்டது. ஐந்து நிறுவனங்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டதுடன், உரிமம் இல்லாத நான்கு இடங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.













