
மும்பை: நவ.6- மும்பையை அடுத்த தானே மாவட்டம், காஷிகாவ் பகுதியில் உள்ள டோடியா பெட்ரோல் பங்க் அருகே வனவிலங்கு கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்துக்கு இடமாக அங்கு நடமாடிய முகமது டேனிஷ் பயிம் கான் (23), அப்துல் கரீம் ரஷீத் அகமது ஷேக் (51) ஆகிய இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்த 2 கண்ணாடிக் குப்பிகளில் நல்லபாம்பு விஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குப்பியில் 250 மில்லி கிராமும், மற்றொரு குப்பியில் 260 மில்லி கிராமும் விஷம் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நல்லபாம்பு விஷத்தின் மதிப்பு ரூ.5 கோடியே 25 லட்சம் என தெரியவந்தது.சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபரான பைசான் அப்துல் அஜீஸ் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மும்பை மான்கூர்டு-டிராம்பே பகுதியைச் சேர்ந்த முக்கிய வினியோகஸ்தர்களான பாரூக் அலி அப்துல் அலி (37), நூர் முகமது வாலி முகமது ஷேக் (47) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இதன் மூலம், நல்லபாம்பு விஷம் கடத்தல் தொடர்பாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தல் கும்பல் மீது காஷிகாவ் போலீசார் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













