
பெங்களூரு,நவ.6-
மனைவி மீது ஏற்பட்ட கடும் கோபத்தில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொடூரமாக அடித்துக் கொன்ற கேப் டிரைவரை ராஜாஜி நகர் போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்துசேகர். இவர் கேப் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. பாஷ்யம் வட்டம் அருகே வசித்து வந்த இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாக குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. பெரியோர்கள் முன்னிலையில் பலமுறை பஞ்சாயத்து நடத்தியும் சுமுக முடிவு ஏற்படவில்லை.
மனைவி சுனிதாவுக்கு ஆதரவாக அவரது தாய் ரூபவதி, சகோதரர்கள் சிவகுமார், சங்கர் ஆகியோர் பேசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்துசேகர், மனைவியின் குடும்பத்தினரைப் பழிகவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டார்.
அதன்படி, முதலில் மனைவி சுனிதாவை வீட்டில் வைத்து ஆட்டுக்கல்லால் தலையில் பலமாக அடித்துக் கொன்றார். பின்னர் சடலத்தை காரில் ஏற்றிச் சென்று சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலைப் பகுதியில் வீசினார். தொடர்ந்து, மனைவி தனது தோழிகளுடன் சுற்றுலா சென்றிருப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் பொய் கூறினார்.
இதன்பின்னர், மது விருந்து தருவதாகக் கூறி மைத்துனர்களான சிவகுமார், சங்கர் ஆகிய இருவரையும் வீட்டிற்கு வரவழைத்து ஆட்டுக்கல்லால் அடித்துக் கொன்றார். அடுத்து, சங்கரின் மனைவி நளினி, சிவகுமாரின் மனைவி திவ்யா, மாமியார் ரூபவதி மற்றும் 7 வயது சிறுவன் புனீத் ஆகியோரையும் தனித்தனியாக வீட்டிற்கு வரவழைத்து கொடூரமாகக் கொலை செய்தார்.
கொலை செய்த பிறகு வீட்டில் இருந்த ரத்தக் கறைகளைக் கழுவி, ஆட்டுக்கல்லையும் கழுவிச் சான்றுகளை அழிக்க முயன்றார். இதனிடையே, நளினியைக் காணவில்லை என்று அவரது தாய் ஸ்ரீராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இந்துசேகரிடம் கெடுபிடி விசாரணை மேற்கொண்டனர். அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த போலீசார், அவரது வீட்டில் சோதனையிட்டபோது இந்த 7 பேர் கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில் நந்தி மலையில் சோதனை நடத்தி 7 வயது சிறுவன் புனீத்தின் உடலை மீட்டனர். மற்ற 6 பேரின் சடலங்களையும், சார்மாடி காட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீசியதாகக் கூறியதால் அங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சடலங்களைக் கடத்தப் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
குடும்பத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு நகரில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏழு பேரை ஆட்டுக்கல்லால் கொன்றது எப்படி? மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை தீர்த்து கட்டியது எப்படி இவர் தனியாக இதை செய்தாரா அல்லது யாராவது இவருக்கு துணை புரிந்தார்களா சடலங்கள நந்தி மலை வரை கொண்டு போய் வீசியது எப்படி என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் பெங்களூர் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது















