
காசர்கோடு, நவ. 11-
கேரளாவில் அரசு விழா ஒன்றில் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ முழுமையாகப் பாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, மாநில அமைச்சர் கே. முரளிதரன் பாதியிலேயே தனது இருக்கையில் அமர்ந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்தச் செயலுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில சுகாதாரத் துறை அமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே. முரளிதரன் உள்ளார். காசர்கோடு மாவட்டம் முள்ளேரியா பகுதியில் உள்ள குடும்ப நல ஆரோக்கிய மையத்தில் புதிய ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் முரளிதரன் பங்கேற்றார். விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கப்பட்டது. பாடலின் முதல் இரண்டு பத்திகள் பாடி முடிந்ததும், பாடல் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பாக மேடையில் இருந்த அமைச்சர் முரளிதரன் தனது நாற்காலியில் அமர்ந்தார். அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு அமர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி எம்.பி. ராஜ்மோஹன் உன்னிதன், உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதன்யா சுரேஷ் ஆகியோரும் பாடல் முடிவதற்கு முன்பாக தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர். அதே நேரத்தில், மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான கே. நீலகண்டன் மட்டும் பாடல் முழுமையாக முடியும் வரை மேடையில் நின்றபடி இருந்தார். அமைச்சர் முரளிதரனின் செயல் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், காசர்கோடு மாவட்ட பா.ஜ.க. தலைவர் எம்.எல். அஸ்வினி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தேசிய கொள்கைகளையும் அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளையும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அவமதித்துவிட்டனர்,” என்றார்.













