
புதுடெல்லி, செப். 26-
2025-ம் ஆண்டில் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் தொடங்கியதிலிருந்து, 18 முதல் 28 வயதுக்குட்பட்ட 2.73 கோடி ஜென்-ஸி இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 14-ல் 2021-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மற்றும் பிரிவு 19-ன் படி, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 அல்லது அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயதை நிறைவு செய்பவர்கள், அல்லது ஏற்கெனவே 18 வயதை அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. வழக்கமான வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு நடைமுறையின் கீழ், அவர்கள் வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். இந்த நடைமுறையின்படி, எஸ்.ஐ.ஆர். காலகட்டத்திலும் 18 முதல் 28 வயதுடையவர்களில் 2.73 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இளம் வாக்காளர்களின் பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு இது சான்றாகும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.















