Home மாவட்டங்கள் சென்னை விடுதி நிதி முறைகேடு: தவாக வலியுறுத்தல்

விடுதி நிதி முறைகேடு: தவாக வலியுறுத்தல்

சென்னை, அக். 11-
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களின் கல்வி, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது நிர்வாக அமைப்புகளின் முக்கியக் கடமையாகும். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் அந்த நிதி முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார், நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகளையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 8 வட்டாட்சியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. மாணவர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகச் செலவிடப்பட்டதா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை விரைந்து, நேர்மையாக மேற்கொண்டு, பொறுப்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி இனிமேலும் முறைகேடாகப் பயன்படுத்தப்படாத வகையில் நிர்வாக ரீதியான கண்காணிப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.