Home செய்திகள் உலக செய்திகள் விண்வெளி மோதலுக்கான களமாகக்கூடாது

விண்வெளி மோதலுக்கான களமாகக்கூடாது

நியூயார்க், அக். 22- விண்வெளி, மோதலுக்கான களமாக இல்லாமல், ஒத்துழைப்புக்கான வெளியாகவே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் பிற தரப்பினரைச் சந்திப்பதற்காக இந்திய எம்.பி.க்கள் குழு ஒன்று ஐ.நா.வுக்குச் சென்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐ.நா. பொதுச்சபையில் நடைபெற்ற விண்வெளி தொடர்பான விவாதத்தில் அந்தக் குழுவினர் பங்கேற்றனர். அப்போது இந்தியா சார்பில் பேசிய சுதா மூர்த்தி எம்.பி. கூறியதாவது:
விண்வெளி ஆய்வுகளில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகிய இரு பரிமாணங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. விண்வெளி அனைவருக்கும் பொதுவானது என்று இந்தியா நம்புகிறது. நாம் அனைவரும் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் கொண்டவர்கள். எனவே, விண்வெளி ஒத்துழைப்புக்கான வெளியாகவே தொடர வேண்டும்; மோதலுக்கான இடமாக இருக்கக்கூடாது.
விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுப்பதற்கான அணுகுமுறைகள் குறித்தும், அவற்றில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது குறித்தும் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவுகின்றன. விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுப்பதற்கான சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் கருவி, உலக அளவில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும், சரிபார்க்கக்கூடியதாகவும், பலதரப்பு பேச்சுவார்த்தை மூலம் உருவாக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இதை ஆயுதக் குறைப்பு மாநாட்டிலும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சில அச்சுறுத்தல்கள் அல்லது குறிப்பிட்ட அம்சங்கள் மீது மட்டும் கவனம் செலுத்துவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்பாகச் செயல்படும் பல்வேறு மன்றங்களின் ஆணைகள் மதிக்கப்பட வேண்டும். இந்தச் செயல்முறையின் எந்தவொரு முடிவும், அமைதியான மற்றும் சட்டப்பூர்வமான நோக்கங்களுக்காக அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளைப் பரிமாறிக் கொள்வதைத் தடுக்கக் கூடாது என்று வளரும் நாடான இந்தியா நம்புகிறது என்றும் சுதா மூர்த்தி தெரிவித்தார்.