Home செய்திகள் தேசிய செய்திகள் ஹசீனா திரும்பினால் மரண தண்டனை: அட்டர்னி ஜெனரல்

ஹசீனா திரும்பினால் மரண தண்டனை: அட்டர்னி ஜெனரல்

டாக்கா: நவ. 11-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதையடுத்து அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் வரும் டிசம்பரில் வங்கதேசத்துக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி இந்தியாவில் உள்ள வங்கதேசத் தூதரகத்துக்கு ஷேக் ஹசீனா கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அவருக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க முடியாது என்று வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும், வங்கதேச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவரை, இந்திய அரசு முறைப்படி வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இந்தச் சூழலில், வங்கதேச அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்லாம் தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
“வங்கதேச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க முடியாது. குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்படி, தன்னை வங்கதேச அரசிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசிடம் அவர் முறையிட வேண்டும். இந்த நடைமுறையின் மூலமாக மட்டுமே அவர் வங்கதேசத்துக்குத் திரும்ப முடியும்.
ஷேக் ஹசீனா வங்கதேசத்துக்குத் திரும்பினால், அவர் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்” என்றார்.
வங்கதேச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், இந்தியா–வங்கதேசம் இடையிலான குற்றவாளிகள் ஒப்படைப்பு நடைமுறையின்படியும் மட்டுமே அவரது நாடு திரும்புதல் சாத்தியம் என அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்