
புதுடெல்லி, அக். 8-
ஃப்ளைதுபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முயற்சியைத் தடுத்ததில் உதவியதாகக் கூறப்படும் இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், உடல்நலத்தில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவர் புதன்கிழமை 10 அடிகள் நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மச்சார், அபுதாபியில் இருந்து துபாயில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு 10 அடிகள் நடந்ததாகவும் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் என்.டி.டி.வி.யிடம் தெரிவித்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, மச்சாரின் குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற இருவார செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: “கேப்டன் மச்சார் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல் அளித்து வருகிறோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எங்கள் தூதரகம், அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், உள்ளூர் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார்; சிகிச்சைக்கு நல்ல முறையில் பதிலளித்து வருவதுடன், உடல்நிலையும் மேம்பட்டு வருகிறது” என்றார்.















