Home செய்திகள் தேசிய செய்திகள் 12 மாதங்கள் உயிரிழப்பு இல்லை: சிஆர்பிஎப் படைக்கு மோடி பாராட்டு

12 மாதங்கள் உயிரிழப்பு இல்லை: சிஆர்பிஎப் படைக்கு மோடி பாராட்டு

புதுடெல்லி: நவ. 5-
நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), தொடர்ந்து 12 மாதங்களாக பணியின்போது எந்த உயிரிழப்பும் இன்றி செயல்பட்டு சாதனை படைத்துள்ளது. இதற்காக சிஆர்பிஎப் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தொடர்ச்சியாக 12 மாதங்களாக சிஆர்பிஎப் படையில் பணியின்போது எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. கடந்த 47 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இந்த ‘பூஜ்ஜியம்’ பல விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவுடன், ‘பூஜ்ஜியம்’ என்ற எண்ணும், சிஆர்பிஎப் வீரர்கள் மூவர் வெவ்வேறு திசைகளை நோக்கித் துப்பாக்கிகளை ஏந்தியிருக்கும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து சிஆர்பிஎப் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிஆர்பிஎப் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள பல்வேறு மோதல் பகுதிகளில் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், இந்தச் சாதனையை எட்டியுள்ளோம். நாட்டின் வன்முறை அதிகம் நிறைந்த பல பகுதிகளில் சிஆர்பிஎப் வீரர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, கடந்த பல ஆண்டுகளாக இப்பணிகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.
தற்போது, கடந்த 12 மாதங்களாக ஒரு வீரர் அல்லது அதிகாரிகூட உயிரிழக்கவில்லை என்பது, பாதுகாப்புச் சூழல் மேம்பட்டுள்ளதையும், இந்தப் படை தனது கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறியுள்ளதையும் காட்டுகிறது” என்றார்.
சுமார் 3.25 லட்சம் வீரர்களைக் கொண்ட சிஆர்பிஎப், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்புப் பணிகளில் அப்படை ஈடுபட்டு வருகிறது.