
சென்னை: மே 14 –
இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டது. 10ஆம் வகுப்பை போல் 12 ஆம் வகுப்பிலும் திருவனந்தபுரம் மண்டலமே தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 85.20 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 88.39 சதவீதமாகும்.
இந்த ஆண்டு திருவனந்தபுரம் மண்டலம் 95.62% தேர்ச்சி சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சென்னை 93.84% மற்றும் பெங்களூரு 93.19% தேர்ச்சி விகிதத்துடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு விஜயவாடா (99.60%) மற்றும் திருவனந்தபுரம் (99.32%) அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விஜயவாடா 92.77% பெற்று நான்காம் இடத்திலும், டெல்லி மேற்கு 92.34% மற்றும் டெல்லி கிழக்கு 91.73% அதற்கு அடுத்த இடங்களிலும் உள்ளன. அகமதாபாத் 90.60% மற்றும் குர்கான் 88.45% தேர்ச்சிப் பதிவு செய்தன. லூதியானா 87.92%, புனே 87.32% மற்றும் அஜ்மீர் 86.78% ஆகிய மண்டலங்கள் குறிப்பிடத்தக்க தேர்ச்சியைப் பெற்றுள்ளன. மேலும், பஞ்ச்குலா 85.73%, ராஞ்சி 85.01%, குவாஹாட்டி 83.41% மற்றும் லக்னோ 82.21% தேர்ச்சியைப் பதிவு செய்தன. புவனேஸ்வர் 81.71%, டேராடூன் 81.42% மற்றும் ராய்ப்பூர் 80.88% ஆகவும் தொடர்ந்தன.போபால் 79.43% மற்றும் நொய்டா 79.02% தேர்ச்சி பெற்றன. பட்னா 74.45% ஆகவும், பிரயாக்ராஜ் 72.43% உடன் மிகக் குறைந்த தேர்ச்சி சதவீதத்தைப் பதிவு செய்தது. மாணவர்களின் வசதிக்காக, அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மட்டுமின்றி, DigiLocker, UMANG செயலி மற்றும் SMS சேவை மூலமாகவும் தங்கள் முடிவுகளை அணுகலாம். இணையதளத்தில் முடிவுகளைப் பதிவிறக்குவதற்கான வழிமுறைகள்: முதலில் results.cbse.nic.in தளத்திற்குச் செல்லவும். “CBSE Class 12 Result 2026” இணைப்பைக் கிளிக் செய்யவும். அடுத்ததாக, ரோல் நம்பர், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடி போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டுச் சமர்ப்பித்து, உங்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம்.


















