Home செய்திகள் தேசிய செய்திகள் 23 காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட வன்தாமா வழக்கு: மீண்டும் விசாரணை

23 காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட வன்தாமா வழக்கு: மீண்டும் விசாரணை

ஸ்ரீநகர், ஆகஸ்ட் 25- ஜம்மு – காஷ்மீரில், கடந்த 1998ல் 23 காஷ்மீர் பண்டிட்டுகள் வன்தாமா என்ற கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, மாநில புலனாய்வு அமைப்பு மீண்டும் விசாரிக்க துவங்கி உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்த 1990களின் காலகட்டத்தில், காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், காஷ்மீர் பண்டிட்டுகள் தொடர்பான பல கொலை வழக்குகள் பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் நிலுவையில் உள்ளன. அவற்றை மீண்டும் விசாரிக்கும் நடவடிக்கையை மாநில புலனாய்வு அமைப்பு தீவிரப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று வன்தாமா படுகொலை வழக்கு. காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள வன்தாமா கிராமத்தில், 1998 ஜன., 25ல் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் வீடுகளுக்குள் புகுந்தனர். ஒன்பது பெண்கள், நான்கு குழந்தைகள் உட்பட 23 பேரை சுட்டுக் கொன்றனர். குடியரசு தினத்துக்கு முந்தைய இரவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் உள்ள இந்த வழக்கை தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிந்து, தாக்குதல்களில் அவர்களின் பங்கை உறுதி செய்யும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இதே போல் 1989ல் காஷ்மீர் பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை விதித்ததற்காக, நீதிபதி நீல்காந்த் கன்ஜூ சுட்டுக்கொல்லப்பட்டார். காஷ்மீர் பண்டிட் தலைவரான திகா லால் தப்லூவும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்த வழக்குகளையும் காஷ்மீர் சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.