
துபாய்: அக். 28-
உலகிலேயே முதல் முறையாக, 24 காரட் சுத்தமான தங்கத்தால் ஆன நடைபாதை, துபாயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் இது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், உலகின் வணிக மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்குகிறது. குறிப்பாக தங்கநகைகளின் கூடாராமாக திகழ்கிறது துபாய். அங்கு தங்கம் மற்றும் நகைகள் வாங்குவதற்கு வரி கிடையாது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கடுமையான வரிகள் இல்லாததால், உலகின் பல நாடுகளை விட துபாயில் தங்கம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணியர் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதற்கு துபாயை தேடிச் செல்கின்றனர். இதற்காக துபாயின் தெய்ரா பகுதியில் தங்க விற்பனை மாவட்டம், இந்தாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. தங்கம், ஆபரணங்கள், மொத்த வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான 1,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் இங்கு இடம்பெற்றுள்ளனர்.இந்த தங்க நகர அந்தஸ்தை மேலும் மெருகூட்டும் வகையிலும், சுற்றுலாப் பயணியரை கவரும் நோக்கிலும், தங்க மாவட்டம் பிரமாண்டமான சாதனை படைக்கத் தயாராகி வருகிறது. அதாவது அங்கு உலகின் மிக நீளமான, 24 காரட் தங்கத்திலான நடைபாதை விரைவில் திறக்கப்படவுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள், இந்த நடைபாதை திறக்கப்பட உள்ளது.













