Home செய்திகள் தேசிய செய்திகள் 30 பந்துகளில் சதம்: அபிஷேக் சர்மா சாதனை

30 பந்துகளில் சதம்: அபிஷேக் சர்மா சாதனை

புதுடில்லி, செப். 18- இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக யாஷ் தாக்குர் சேர்க்கப்பட்டார். வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவுக்கு அபிஷேக் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார். இந்தியா பவர்பிளேவில் 100 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. முன்னர் 2025-ல் இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் பவர்பிளேவில் இந்தியா 95 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. அபிஷேக் 30 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும், ஐசிசியின் முழுநேர அந்தஸ்து பெற்ற நாட்டைச் சேர்ந்த வீரர் விளாசிய விரைவான சதம் என்ற சாதனையையும் படைத்தார். முன்னர் ரோஹித் சர்மா 2017-ல் இலங்கைக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டி20 போட்டியில் 35 பந்துகளில் சதமடித்திருந்தார். ஜிம்பாப்வேயின் சிகந்தர் ராசா, நியூஸிலாந்தின் பின் ஆலன் ஆகியோர் தலா 33 பந்துகளில் சதமடித்திருந்தனர். முழுநேர அந்தஸ்து பெறாத நாடுகளில் எஸ்டோனியாவின் சஹில் சவுகான் 2024-ம் ஆண்டு சைப்ரஸுக்கு எதிராக 27 பந்துகளில் சதமடித்தார். சர்வதேச டி20 அரங்கில் அதுவே குறைந்த பந்துகளில் விளாசப்பட்ட சதமாக உள்ளது. இந்த வரிசையில் அபிஷேக்கின் சதம் 3-வது இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் துருக்கியின் முகமது பஹத் உள்ளார். அவர் 2025-ம் ஆண்டு பல்கேரியாவுக்கு எதிராக 29 பந்துகளில் சதமடித்தார். போட்டியில் அபிஷேக் 34 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 9.5 ஓவர்களில் 142 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 2, ஷிவம் துபே 14, இஷான் கிஷன் 10, நிதிஷ் குமார் ரெட்டி 1, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. 222 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 14.1 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்தியா 127 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் நிதிஷ் குமார் ரெட்டி, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அக்சர் 2, பும்ரா 1, யஷ் தாக்குர் 1 விக்கெட் கைப்பற்றினர். நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.