Home செய்திகள் உலக செய்திகள் 52 ஆண்டுகளில் வனவிலங்கு இனங்கள் 73% வீழ்ச்சி

52 ஆண்டுகளில் வனவிலங்கு இனங்கள் 73% வீழ்ச்சி

பெர்ன், அக். 9- உலகில் உள்ள முதுகெலும்புள்ள விலங்குகளின் எண்ணிக்கை கடந்த 52 ஆண்டுகளில் 73 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக, சுவிட்சர்லாந்தில் செயல்படும் உலகளாவிய இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான டபிள்யூ.டபிள்யூ.எப். வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘லிவிங் பிளானட் அறிக்கை –2026’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், பாலூட்டிகள், மீன்கள், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட முதுகெலும்புள்ள விலங்குகளின் எண்ணிக்கையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1970 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடமாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆய்வின் முடிவுகளின்படி, நன்னீரில் வாழும் விலங்கினங்கள் அதிகபட்சமாக 85 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன. தரையில் வாழும் விலங்கினங்களின் எண்ணிக்கை 69 சதவீதமும், கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை 59 சதவீதமும் குறைந்துள்ளது. முதுகெலும்புள்ள விலங்குகளின் பல்வேறு பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, இயற்கைச் சூழலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை வெளிப்படுத்துவதாக அறிக்கை தெரிவித்துள்ளது. வனப்பகுதிகள் அழிக்கப்படுதல், இயற்கை வளங்கள் அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்படுதல், காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை வனவிலங்குகள் அழிவுக்குக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. இத்தகைய காரணிகளால் விலங்குகளின் வாழிடங்கள் பாதிக்கப்படுவதுடன், அவற்றின் எண்ணிக்கையும் நடமாட்டமும் குறைந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் இந்தியாவுக்கான தலைமை அதிகாரி ரவி சிங், புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போன்ற முயற்சிகளைப் பின்பற்றினால், இயற்கையை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.