
பலுசிஸ்தான்: அக். 28-
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில், தனி நாடு கோரிக்கையை முன்வைத்து மக்கள் பல ஆண்டுகளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணியைச் சேர்ந்த போராளிகள் குழு, பாகிஸ்தானுக்கு எதிராக அவ்வப்போது வழிபாட்டுத் தளங்கள் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ‘ஆபரேஷன் அல்மாஸ்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் முழானி காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கேப்டன் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குப்து பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில், ராணுவ வாகனம் ஒன்று அழிக்கப்பட்டதாகவும், அதுதொடர்பான காணொலியையும் அந்தக் குழு வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆபரேஷன் அல்மாஸ் நடவடிக்கையின் மூலம் 80க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் மேஜர் குவாஹ்ராம் பலோச் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆபரேஷன் அல்மாஸ் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கியது. அதன்பின்னர் பாகிஸ்தான் ராணுவத் தளங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் 12 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இரண்டு காவல் நிலையங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குவாதர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துடன் தொடர்புடைய ராணுவத் தளங்கள் மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் மீதும் தாக்குதல் நடத்தப் போவதாக பலுசிஸ்தான் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.













