
புதுடெல்லி: மே 20-
கிரேட்டர் பெங்களூரு ஆணைய (ஜிபிஏ) தேர்தலை ஆகஸ்ட் 31 க்குள் முழுமையாக நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் இன்று இறுதி எச்சரிக்கையுடன் கூடிய புதிய காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை ஜூன் 30, 2026-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பெங்களூரு மாநகராட்சிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் இல்லாத சூழலில், 5 ஆண்டுகளாக இந்த தேர்தல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில், பருவமழைக்காலம், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் போன்ற நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி, தேர்தலை நடத்த மேலும் 3 மாதங்கள் (செப்டம்பர் 30 வரை) அவகாசம் கோரி கர்நாடக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, கர்நாடக அரசின் கோரிக்கையை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், நீண்டகால தாமதத்தைக் சுட்டிக்காட்டி கடும் அதிருப்தி தெரிவித்தது. ஜூன் 30ஆம் தேதி வரை இருந்த கெடு, தற்போது ஆகஸ்ட் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவே இறுதி வாய்ப்பு என்றும், இதற்கு மேல் காலநீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 31-க்குள் தேர்தல் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, அதுகுறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத்
தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள 5 கார்ப்பரேஷன்களின் 369 வார்டுகளுக்கான தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் விரைவுப்படுத்தும் என்று தெரிகிறது. பெங்களூரின் ஐந்து மாநகராட்சிகள் அதாவது கிரேட்டர் பெங்களூர் ஆணையத்தின் ஐந்து மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடக்க இருப்பதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது அனைத்து கட்சிகளும் தங்கள் ஆயத்த பணிகளை தொடங்கும் என்று தெரிகிறது.


















