
டெஹ்ரான், மே 27- ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின. இரு தரப்புக்கும் இடையே சுமார் 40 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. முதலில் பாகிஸ்தான் தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. தற்போது கத்தார் தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் முகாமிட்டு உள்ளனர். பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா, ஈரான் இடையே உடன்பாடுகள் எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக ஈரானின் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்ணிவெடிகளை வீசிக் கொண்டிருந்த ஈரான் ராணுவ படகுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தியில் பறந்த அமெரிக்க போர் விமானத்தைக் குறிவைத்து ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. மேலும் அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரானின் அதிவிரைவு ரோந்து படகுகள் ஹார்முஸ் ஜலசந்தியில் வலம் வந்தன. இந்த ரோந்துபடகுகள் மூலம் கடலில் கண்ணிவெடிகளும் வீசப்பட்டன. எனவே தற்காப்பு நடவடிக்கைக்காக ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ஏவுகணை தளங்களைக் குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசின. மேலும் கத்தார், பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் இருந்து ஈரானை குறிவைத்து ஹிமார்ஸ் ரக ஏவுகணைகளும் வீசப்பட்டன. அமெரிக்க போர்க்கப்பல்களை நெருங்கி வந்த ஈரான் ரோந்து படகுகள் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. நாங்கள் போர் நிறுத்தத்தை மீறவில்லை. தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்தினோம். இவ்வாறு அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.




















