
புதுடெல்லி, ஜூன் 4- விமான எரிபொருளின் திடீர் விலை உயர்வை சமாளிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு ரூ.10,000 கோடியில் ஒரு நிதியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, போர் முடியும் வரை உள்ளூர் விமானங்களுக்கான எரிபொருள் (ஏடிஎப்) விலை உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய விமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில், விமான எரிபொருளின் திடீர் விலை உயர்வை சமாளிக்க, விமானப் போக்குவரத்துத் துறைக்கு ரூ.10,000 கோடியில் ஒரு நிதியத்தை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. தேவை குறைவு காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. குறைவான பயணத் தேவை மற்றும் அதிக எரிபொருள் விலையால் ஏற்பட்ட செயல்பாட்டுச் செலவுகள் உள்ளிட்ட பல காரணங்களால், மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரலில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 4.2% குறைந்து, சுமார் 1.38 கோடியாகப் பதிவாகியுள்ளது. கடந்த மாதம், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.8,289.04 (அல்லது 8.56%) உயர்த்தப்பட்டு, ரூ.96,638.14-லிருந்து ரூ.1,04,927.18 ஆக அதிகரித்தது.



















