
சித்ரதுர்கா: ஜூலை 21-
சித்ரதுர்கா நகரில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேளகுட்டா மற்றும் நெஹ்ரு நகர் பகுதியில் நடந்த தனித்தனி சம்பவங்களில் 4 சிறுவர்கள் நாய்கள் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்தனர்.
வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 முதல் 6 வயதுடைய சிறுவர்கள் மீது, திடீரெனப் பாய்ந்த தெரு நாய்கள் அவர்களைக் கொடூரமாகத் தாக்கின. இதில் சிறுவர்களின் முகம், கை, கால் உள்ளிட்ட உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அலீனா, ஆதில், மன்வித் மற்றும் மற்றொரு சிறுவன் ஆகியோர் சித்ரதுர்கா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெரு நாய்களின் தொல்லை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களின் அலட்சியப் போக்கே இன்று குழந்தைகள் பாதிக்கப்படக் காரணம்!” எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஆத்திரத்துடன் குற்றம் சாட்டியுள்ளனர்.













