
கிளாஸ்கோ, ஜூலை 24- 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் 2-வது நாளான இன்று குத்துச்சண்டையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களில் பிரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), ஆதித்யா பிரதாப் சிங் (65 கிலோ) ஆகியோர் பங்கேற்கின்றனர். இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களில் பிரியா கங்காஸ் (60 கிலோ), ஜதுமணி சிங் (55 கிலோ), சுமித் குண்டு (70 கிலோ) ஆகியோர் முதல் சுற்று ஆட்டங்களில் களமிறங்குகின்றனர். இந்தியாவின் பதக்கப் பட்டியலில் குத்துச்சண்டை விளையாட்டு மீண்டும் கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக குத்துச்சண்டையில் மட்டும் இந்தியா இதுவரை 44 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. எனவே இந்த முறையும் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறந்த திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளில் 8 பேருக்கு முதல் சுற்றில் ‘பை’ (நேரடியாக அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு) பெற்றுள்ளனர். இந்த வகையில், ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ) ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்ய இன்னும் ஒரே ஒரு வெற்றியை பெற்றால் போதும். முன்னாள் உலக சாம்பியனான லோவ்லினா போர்கோஹெய்ன், ஐந்து வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். 54 கிலோ எடைப் பிரிவிலிருந்து 51 கிலோ எடை பிரிவுக்கு மாறியுள்ள ராணுவ வீராங்கனை சாக் ஷி சவுத்ரி மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. அவர், தேர்வுப் போட்டிகளின் போது உலக சாம்பியன்களான நிகத் ஜரீன், மீனாட்சி ஹூடாவைத் தோற்கடித்திருந்தார். அதைத் தொடர்ந்து செக் கிராண்ட் ஃப்ரீ போட்டியில் தங்கம் வென்று தனது திறமையை மீண்டும் நிரூபித்திருந்தார்.
















