Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு

அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு

தெஹ்ரான்: ஜூலை 27-
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசத்தின் ஐ.நா தூதர் கூறியுள்ளார்.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக மீண்டும் மோதலில் தீவிரம் காட்டின. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.
இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் கடும் தாக்குதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்தது அமெரிக்கா. அதற்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் கொடுத்தது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை ஈரான் உறுதி செய்துள்ளது. ‘படைகள் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு கொஞ்சம் நேரம் கொடுக்கலாம் என அதிபர் ட்ரம்ப் கருதுகிறார்’ என்று அமெரிக்காவுக்கான ஐ.நா தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமைக்கு முந்தைய இரவு வரையில் ஈரான் மீது தொடர்ந்து 13 இரவுகளாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இதை அந்நாட்டு ராணுவத்தின் மத்திய போர் கட்டளையகம் கூறியுள்ளது.
இந்தச் சூழலில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் அமெரிக்கா தாக்குதல் மேற்கொள்ளவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்கா தாக்குதலை நிறுத்தியாக ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமினியா கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி உள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் பேரலுக்கு சுமார் 5 டாலர்கள் குறைந்துள்ளதாக தகவல். தற்போது ஒரு பேரால் 88.03 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி நிலையில் சற்று தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.