
புதுடெல்லி, ஜூலை 28- டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர் ஜூனைத் சமூக வலைதள வீடியோவில் கூறியிருப்பதாவது: “டெல்லி ஜந்தர் மந்தரில் போராடியவர்களுக்கு நான் உணவு வழங்கி வந்தேன்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாய் கடிக்காக ஆர்எம்எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, என் நண்பருடன் திரும்பிக் கொண்டிருந்தபோது டெல்லி காவலர்கள் என்று கூறிய சிலர் எங்களை வழிமறித்து என்னை மட்டும் பிடித்துச் சென்றனர். இரவு முழுவதும் என் கண்களைக் கட்டி வைத்திருந்தனர்.
மறுநாள் காலையில் ஒரு அதிகாரி, “உணவு விநியோகத்துக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று விசாரித்தார். அதற்கு, ஆதரவாளர்கள் தரும் நன்கொடை மூலமாகவே உணவும் தண்ணீரும் கிடைப்பதாக நான் பதிலளித்தேன். அதன் பிறகு, என்னை காரில் முசோரிக்கு கொண்டு சென்று விட்டுவிட்டனர். சனிக்கிழமை அங்கிருந்து டாக்ஸி பிடித்து மீண்டும் வந்து சேர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.














