Home செய்திகள் உலக செய்திகள் ரஷ்யாவை முடக்கும் அமெரிக்காவின் புதிய மசோதாவால் சிக்கல்

ரஷ்யாவை முடக்கும் அமெரிக்காவின் புதிய மசோதாவால் சிக்கல்

வாஷிங்டன், ஜூலை 29- ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்காவின் செனட் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நம் நாட்டுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை வதித்துள்ளது. இந்நிலையில் தான் ரஷ்யாவிற்கு இன்னும் கூடுதலாக அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இதற்காக அமெரிக்காவின் செனட் சபையில் புதிய மசோதா மீது விரைவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த மசோதா என்பது ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகரிப்பதோடு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் உள்பட வர்த்தக ரீதியாக பிற பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு வழங்க உள்ளது. இந்த மசோதா தான் தற்போது இந்தியாவுக்கும், சீனாவிற்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும், அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அப்படி இருக்கும்போது இந்த மசோதா அமெரிக்காவின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டால் டிரம்பால் நம் நாட்டுக்கும், சீனாவிற்கும் 100 சதவீத வரிகளை கூடுதலாக விதிக்க முடியும்.